செவ்வாய், 6 டிசம்பர், 2011

அமெரிக்க வசந்தம் - வால் ஸ்ட்ரீட் போராட்டம்

இது அமெரிக்காவின் முறை, ஆம் இது அமெரிக்காவின் வசந்த காலம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட ஆப்பிரிக்க நாடான டுனீசியாவில் தொடங்கி எகிப்து, லிபியா, பஹ்ரைன், சிரியா, ஏமன் எனப் பரவிய அரேபிய வசந்த காலத்தைத் தொடர்ந்து இந்தியாவின் வசந்த காலம்
அண்ணா ஹஜாரே வடிவில் வந்தது. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் எழுந்த மாபெரும் மக்கள் போராட்டங்களைப் போன்ற ஒன்று தனது நாட்டிலும் உருவாகுமென்று அமெரிக்கா எதிர்பார்த்திருக்காது. ஒருவகையில் மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் கோடை மழையைப் போன்றவை, எப்போது வரும் என்று சொல்ல முடியாது. எந்தப் பொறி பெரும் காட்டுத் தீ உருவாகக் காரணமாக இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இதன் காரணமாகவே, பெரும் அமைப்புகளாலும் கட்சிகளாலும் தெளிவான கோரிக்கைகளின் அடிப்படையில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் பல போராட்டங்கள் பிசுபிசுத்துப் போவதும் முறையான தலைமையும் கோரிக்கைகளும் மாற்றுத் திட்டமும் இன்றி உருவாகும் போராட்டங்கள் பெரும் காட்டுத் தீயாய் நாடு முழுவதும் - இப்போது அமெரிக்காவின் விஷயத்தில் நடப்பதைப் போல - சில சமயங்களில் கண்டம் விட்டுக் கண்டம் பரவுவதும் நடக்கிறது. வால் ஸ்ட்ரீட் நிரப்பும் (Occupy Wall Street) போராட்டத்தின்போது நியூயார்க் நகரில் ஒருவர் பிடித்திருந்த தட்டி கூறுவதைப் போல ‘‘புரட்சியின் கணத்தை ஒருவராலும் யூகிக்க முடியாது.’’
அரேபிய வசந்த காலமானது சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக மக்களாட்சி வேண்டி நடந்த போராட்டங்கள் எனில் இப்போது அமெரிக்காவில் நடந்துவரும் வால் ஸ்ட்ரீட் நிரப்பும் போராட்டமானது நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம். தனிநபர் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் உதாரணம் காட்டத் தகுந்த நாடாக அமெரிக்கா இருந்தபோதிலும் ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமாக சுயத் தணிக்கைசெய்து கொள்ளும் ஊடகங்கள் அமெரிக்காவைப் போல் வேறெங்கும் இல்லை. அமெரிக்காவின் முக்கியமான ஊடக நிறுவனங்கள் தாங்களே பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களாக இருப்பதால் அவை வேறு மாதிரியாகச் செயல்பட வாய்ப்பில்லை. அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தல் banana republic என்று வர்ணிக்கப்படும் நாடுகளில் நடக்கும் தேர்தல் என்ற கேலிக்கூத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது. ஏறக்குறைய எந்த வித்தியாசமும் இல்லாத இரு கட்சிகளுக்கிடையில், வர்த்தக வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பொருட்படுத்தும் வேட்பாளர்கள் இருவருக்கிடையே நடக்கும் தேர்தல் அது. கடந்த தேர்தலில் அமெரிக்காவின் பெரும் நிதி நிறுவனங்களின், அதாவது வால் ஸ்ட்ரீட்டின் முழுமையான ஆதரவு பாரக் ஒபாமாவிற்கு இருந்தது. அதன் காரணமாகவே வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத அளவிற்கு அவரால் தேர்தல் நிதி திரட்ட முடிந்தது. ஆக இன்றைய அமெரிக்க அரசாங்கம் என்பது ‘‘government of the big corporates, by the big corporates, for the big corporates’’ என்பதைத் தவிர வேறல்ல. ஏற்கனவே அமெரிக்கத் தேர்தல் முழுமையாகப் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் நிதியின் பிடியில் இருக்க 2010ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம், கார்ப்பொரேட் நிறுவனங்கள் தேர்தலின்போது தாங்கள் விரும்பும் வேட்பாளரை ஆதரிக்கும் விளம்பரங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்று தீர்ப்பளித்ததன் மூலம் அமெரிக்கத் தேர்தலை முற்றிலுமாகப் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. இந்தத் தீர்ப்பு அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தமான பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் அளிக்கப்படுவதாக நீதிபதிகள் கூறியது பெரும் முரண்நகைதான்.
போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளையோ அரசாங்கத்தையோ குறிவைக்காது வால் ஸ்ட்ரீட்டை குறிவைத்திருப்பதற்குச் சரியான காரணங்கள் இருக்கின்றன. 1970களிலிருந்து நிதி மூலதனத்தின் ஆதிக்கம் வளரத் தொடங்கி இன்று அது மொத்த அரசாங்கத்தையும் இரண்டு அரசியல் கட்சிகளையும் (ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி) முழுமையாகத் தங்கள் பிடியில் வைத்திருக்கிறது. நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், நாஸ்டாக் உட்படப் பல பெரும் நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட் பகுதியில் இருப்பதால் நிதி மூலதனம், பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் குறியீடாக வால் ஸ்ட்ரீட் விளங்குகிறது. இதன் காரணமாகவே இந்த நிதி நிறுவனங்களின் பேராசையால் பாதிக்கப்பட்ட மக்கள் வால் ஸ்ட்ரீட் நிரப்பும் (நம்மூர் அரசியல் கட்சிகளின் சிறை நிரப்பு போராட்டம் உங்கள் நினைவுக்கு வரக்கூடும்) போராட்டத்தைத் தொடங்கினர். நிதி நிறுவனங்களின் பேராசை எத்தகையது என்பதை விளங்கிக்கொள்வது இன்றையப் பொருளாதார தேக்கத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள உதவும்.
1920களின் இறுதியில் அமெரிக்கா பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருந்தது. வங்கிகளின் முறையற்ற செயல்பாடுகளும் கட்டுப்பாடற்ற யூக வர்த்தகமும் அன்றைய அமெரிக்காவின் பொருளாதாரத்தை முற்றிலுமாகக் குலைத்திருந்தன. அந்தப் பின்னடைவிலிருந்து வெளியேற 1930களின் தொடக்கத்தில் பிராஃங்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஆட்சிக் காலத்தில் பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நியூ டீல் என்றழைக்கப்படும் இந்தச் சீர்திருத் தங்கள் வங்கிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தியதுடன், நிதி நிறுவனங்களின் யூக வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தியது. இவை பொருளாதார மேதை மேனார்ட் கீன்ஸ் உருவாக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை. அவரது கோட்பாடுகளைப் பின்வருமாறு எளிமைப்படுத்தலாம்: ‘‘ஒரு நாடு பொருளாதாரத் தேக்கத்திலிருந்து வெளிவர வேண்டுமானால் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சந்தை வசம் விடுவதைக் கைவிட வேண்டும். அரசாங்கத்தின் தலையீடு பொருளாதாரத்தில் நேரடியாக இருப்பதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டுப் பெருமளவு நிதியை அரசாங்கம் தொழிற்துறையில் முதலீடுசெய்ய வேண்டும். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருளாதாரத் தேக்கத்தை மேலும் மோசமாக்கும்.’’ நியூ டீல் சீர்திருத்தங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெருமளவு மேம்படுத்தின. இந்தக் காலகட்டத்தில் பணக்காரர்கள், பெரும் பணக்காரர்கள் ஆகியோர் பலனடைந்ததுடன் நடுத்தர, தொழிலாளர் வர்க்கத்தினரும் பலனடைந்தனர். அதாவது இரு வர்க்கத்தினருக்கும் உள்ள இடை வெளி மேலும் மேலும் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டது (இடைவெளி ஒழிக்கப்படவில்லை என்பதை மனத்தில் கொள்க). 1930கள் முதல் 1970கள் வரையிலான இந்தக் கால கட்டம் முதலாளித்துவத்தின் பொற் காலம் என்றழைக்கப்படுகிறது. இந்தக் காலட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதுடன் கல்வி, மருத்துவச் சேவையில் அரசாங்கத்தின் முதலீடு அதிகமாக இருந்தது. இதன் விளைவாகச் சராசரி அமெரிக்கருக்குச் சமூக பாதுகாப்பு இருந்தது.
இந்நிலை 1970களின் பிற்பகுதியில் மாறத் தொடங்கியது. ரொனால்ட் ரீகன் குடியரசுத் தலைவராக இருந்தபோது வங்கிகள், நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள்மீதிருந்த கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறை விதிகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன அல்லது பெருமளவு தளர்த்தப்பட்டன. இதன் விளைவாக உற்பத்தித் துறையில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து யூக வர்த்தகம் செழித்தோங்கியது. இதன் மற்றொரு முக்கிய விளைவு தொழிற்துறையில் வேலைவாய்ப்புகள் பெருமளவு குறைந்ததுடன் சராசரி அமெரிக்கரின் வருவாய் தேக்க நிலையை அடைந்தது. அமெரிக்க மக்களில் 0.01 சதவிகிதம்கூட இல்லாத நிதித் துறையினர் பெருமளவு லாபமீட்ட முடிந்தது. சமூகத்தின் சிறு பான்மையினரான இவர்களுக்கும் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்குமான இடைவெளி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. 2008ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதாரத் தேக்கத்திற்கான காரணம் இந்த நிதி நிறுவனங்களின் யூக வர்த்தகச் செயல்பாடுகளே. இந்தத் தேக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான். 2000ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட housing bubble என்னும் புலப்பாடு யூக வர்த்தகம் எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ள உதவும்.
தனக்கென்று ஒரு வீடு வாங்குவது என்பது சராசரி மனிதனின் வாழ்நாள் கனவு. இன்றைய நடுத்தர வர்க்கம் வீடு வாங்குவதற்குப் பெரிதும் நம்பியிருப்பது வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனைத்தான் வெகு சிலர் மட்டுமே தங்கள் சேமிப்பின் மூலம் வீடு வாங்குபவர்கள். பெரும்பாலானவர்கள் வங்கிகளிலிருந்து கடன்பெற்று வீடு வாங்கிப் பின்னர் மாதத் தவணைகளில் அசலையும் வட்டியையும் செலுத்துகிறார்கள். இவர்கள் செலுத்தும் வட்டிதான் வங்கியின் வருமானம். கடன் பெறுபவரும் வங்கியும் மட்டும் இதில் ஈடுபடும் வரை எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. வங்கியைத் தவிர்த்து நிதி நிறுவனங்கள், அவற்றுடன் தொடர்புடைய பல்வேறு வகையான முதலீட்டாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் எனப் பல தரப்பினர் இந்த வட்டியிலிருந்து லாபம் ஈட்ட முயலும்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. இப்படிப் பல தரப்பினர் ஈடுபடும்போது இதில் யூக வர்த்தகம் புகுந்து விளையாடுகிறது. இதுதான் அமெரிக்காவின் housing bubble விவகாரத்தில் நடந்தது. ஒரு வங்கி வீடு வாங்கப் பல்லாயிரம் பேருக்குக் கடன் தருகிறது. இந்தக் கடன்களை நிதி நிறுவனங்கள் பங்குகளாக வாங்கி உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களுக்கு விற்கின்றன. இதற்காக இந்த நிதி நிறுவனங்கள் ஒரு தொகையை கமிஷனாக வங்கிகளுக்கு வழங்குகின்றன. நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குபவர்கள் அவற்றைப் பிறருக்கு விற்று லாபம் ஈட்டலாம். இந்த நிதி நிறுவனங்களும் இவர்களிடமிருந்து பங்குகளை வாங்கியவர்களும் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், மாதத் தவணைகளில் திருப்புகிறபோது கட்டும் வட்டியில் பங்கு பெறுவார்கள். வாங்கிய கடனை ஒருவர் ஒழுங்காகக் கட்டவில்லையெனில் வீடு ஏலத்திற்கு வரும். வீடு, வீட்டு மனைகளின் விலை எப்போதும் ஏறிக்கொண்டிருப்பதால் அவர் வாங்கிய கடனைவிட அது அதிக விலைக்குப் போகும் என்பதால் வங்கிக்கும் பிறருக்கும் எந்த நஷ்டமும் வராது. மேலும் வீட்டை வாங்கியவர் பீஷீஷ்ஸீ ஜீணீஹ்னீமீஸீtஎன்ற வகையில் வீட்டின் மதிப்பில் சுமார் பத்து சதவிகிதத் தொகையை முதலிலேயே கட்டியிருப்பார். ஆகவே வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் பிற முதலீட்டாளர்களுக்கும் எந்த நஷ்டமும் வராது. மேலும் தங்களுக்கு நஷ்டம் வந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த நிதி நிறுவனங்கள், வங்கியிடமிருந்து தாங்கள் வாங்கும் பங்குகளைக் காப்பீடு செய்து கொண்டன. இதில் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை என்று நம்பியதால் கிமிநி போன்ற அமெரிக்காவின் மாபெரும் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளைக் காப்பீடு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டின. மேலும், இந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்த பங்குகளைப் பிறருக்கு விற்று லாபம் பார்த்தன. வீட்டுக் கடன் என்ற விஷயத்தில் எண்ணற்றவர் முதலீடு செய்யத் தொடங்கியதால் இதில் லாபம் அதிகம் இருப்பதைக் கண்ட வங்கிகள் மேலும் மேலும் வீட்டுக் கடன்களைக் கொடுக்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில் வாங்கிய கடனின் முதல் தவணையைக்கூடக் கட்ட முடியாதவர்களுக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுக்கத் தொடங்கின. இதற்கிடையில் 2000த்தின் மத்தியில் வீட்டுக் கடனுக்கான வட்டியும் அதிகரித்ததால் கடன் தவணையைக் கட்ட முடியாதவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. இதன் விளைவாக லட்சக்கணக்கான வீடுகள் ஒரே நேரத்தில் சந்தையில் விற்பனைக்கு வந்தன. இதனால் வீட்டு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளை வாங்கவும் ஆளில்லை. இதனால் லேமேன் பிரதர்ஸ் போன்ற ராட்சஸ நிதி நிறுவனங்கள், AIG உட்படப் பல நிறுவனங்கள் முற்றிலும் திவாலாயின. உலகெங்கும் இவர்களிடம் பங்குகளை வாங்கி முதலீடு செய்திருந்தவர்களும் தங்கள் பணத்தை இழந்தனர். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை போனது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளை விற்றும் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வீதிக்கு வந்தனர்.
இதை யூக வர்த்தகம் என்று கூறக் காரணம் சந்தை நிலவரம் என்ன, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து இதில் ஈடுபடுகிற யாருக்கும் தெரியாது (இருந்தாலும் இவர்கள் தங்களை நிதி நிபுணர்கள் என்று அழைத்துக்கொள்ளும் முட்டாள்தனத்தை அமெரிக்கப் பொருளாதார அறிஞர் கென்னத் கால்பிரைத் மிகவும் கிண்டலடிப்பார். கால்பிரைத் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்). இதில் முறையான திட்டமிடலும் கிடையாது. ஈடுபடுகிற ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு லாபமடையப் பார்ப்பார்கள். வீட்டுக் கடன் என்னுமே ஒரு விஷயத்தில் இத்தனை பேர் லாபமடைய முயலும்போது ஒரு கட்டத்தில் அது உடைந்து நொறுங்குவது தவிர்க்க வியலாதது. வீட்டுக் கடன் விஷயத்தில் இன்று லாபம் கிடைக்கிறது என்றால் இதுவே எப்போதும் தொடரும் என்பது இவர்களின் யூகம். இத்தகைய யூக வர்த்தகங்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளில், முதலாளித்துவத்தின் தொடக்கக் காலத்திலிருந்து பலமுறை நடந்திருக்கிறது. ஆனாலும் முதலாளித்துவ வர்க்கம் இதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றதில்லை. கற்க முடியாது என்பதுதான் இடதுசாரிகளின் கருத்து. ஆனால் இதிலிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்ட கீன்ஸ் போன்ற முதலாளித்துவப் பொருளாதார மேதைகள் முதலாளித்துவத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றச் சில கோட்பாடுகளை உருவாக்கினர். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்ததை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலாளித்துவத்தின் இந்த நெருக்கடிகள் அதன் உள்ளார்ந்த இயல்பு என்று இடதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் கூறுவது சரி என்பதையே கடந்த நானூறு ஆண்டுக் கால முதலாளித்துவ வரலாறு நிரூபிக்கிறது.
ஆக வழக்கம் போல் - ஏற்கனவே பலமுறை நடந்திருப்பதைப் போல் - இந்தமுறையும் நிதி நிறுவனங்களைத் திவால் நிலையிலிருந்து காப்பாற்றப் பல நூறு கோடி டாலர்களை அமெரிக்க அரசாங்கம் வாரி வழங்கியது. நிதி நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன, ஆனால் நடுத்தெருவிற்கு வந்துவிட்ட லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்களையோ சாதாரண அமெரிக்கர்களையோ காப்பாற்ற எதுவும் செய்யப்படவில்லை. அதாவது பணக்காரர்களுக்குப் பொதுவுடமை, ஏழைகளுக்கு முதலாளித்துவம். முதலீட்டில் லாபம் வந்தால் தங்களுக்கு, நஷ்டம் வந்தால் அது பொதுமக்களின் வரிப் பணத்தில் ஈடு செய்யப்பட வேண்டும் என்பது பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தாரக மந்திரம்.
யூக வர்த்தகத்தால் குமிழ்கள் உருவாவதும் அவை பெருப்பதும் வெகு விரைவில் உடைவதும் ஏற்கனவே பலமுறை நடந்திருக்கின்றன. ‘‘தொழிற்துறை அல்லது வணிகத் துறை (enterprise) என்ற நிலையான ஓடையின் மீது குமிழாக இருக்கும் வரை யூக வர்த்தகம் தீமை செய்வதில்லை. ஆனால் மொத்த தொழிற்துறையே யூகம் என்னும் பெரும் நீர்ச்சுழியின் மீதான குமிழாக மாறுகிறபோது நிலைமை ஆபத்தாகிறது. ஒரு நாட்டின் மூலதன வளர்ச்சியானது சூதாட்டச் செயல்பாடுகளின் துணைவிளைபொருளாகிறபோது அது மிக மோசமான செயல்பாடாகிறது’’ என்னும் மேனார்ட் கீன்ஸின் வரிகள்தாம் கடந்த மூன்றாண்டுகளில் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பொருளாதார வரிகள். நிதி மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது என்ன நடக்கும் என்பதை இதைவிட யாரும் அழகாகக் கூற முடியாது. சுதந்திரச் சந்தையானது வர்த்தகத்திற்கும் யூக வர்த்தகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறியும் திறனற்றது. ஆகவே அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இல்லாது போனால் பொருளாதாரத்தில் உண்மையான வர்த்தகமும் தொழிற்துறையும் அழிவுற யூக வர்த்தகம் செழித்தோங்குவதைத் தடுக்க முடியாது என்பதை கீன்ஸ் சுமார் எண்பதாண்டுகளுக்கு முன்னமே கூறியிருப்பதை 2008ஆம் ஆண்டு ஐநா அவையில் பேசியபோது இந்தியப் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் சுட்டிக்காட்டினார்.
வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்களின் பேராசையால் அமெரிக்க மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை We Are the 99 Percent (http://wearethe99percent.tumblr.com) என்ற வலைதளத்திற்குச் சென்றால் அறிந்துகொள்ளலாம். சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு இன்றி, எதிர்காலம் பற்றிய எந்த நிச்சயமும் இன்றிக் கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் தவிக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் எதிர்பாராத மருத்துவச் செலவினங்கள் காரணமாகப் பல லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் தங்கள் சேமிப்பு அனைத்தையும் இழந்து கடனாளிகளாகி நடுத்தெருவிற்கு வருவதை அந்த வலைதளம் நம் கண் முன்கொண்டுவருகிறது. பட்டப் படிப்பிற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வேலையும் கிடைக்காமல் அலையும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கதையை அது கூறுகிறது. அமெரிக்கா என்றவுடன் சராசரி இந்தியன் ஒருவனின் மனத் திரையில் உருவாகும் பிம்பத்திற்கும் அமெரிக்க யதார்த்தத்திற்கும் இடையே இட்டு நிரப்ப முடியாத இடைவெளி இருப்பதை அதில் நுழைந்தால் நீங்கள் அறியலாம்.
மிகச் சமீப காலம்வரை இத்தகையதொரு மக்கள் எழுச்சி உருவாகும் என்பதை அமெரிக்க ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அமெரிக்க இடதுசாரிகள்கூட எதிர்பார்க்கவில்லை. மக்கள் பெரும் மனக் கொந்தளிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது பல கருத்துக் கணிப்புகளில் தெரியவந்த போதிலும் வால் ஸ்ட்ரீட் நிரப்பும் போராட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த இயக்கத்திற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஏதுமில்லை, இதுவரை இவர்கள் தங்கள் கோரிக்கைகள் இவை என்று எவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை, இன்றைய அமைப்பிற்கு மாற்றாகத் தாங்கள் முன்வைப்பது எதை என்பதையும் இவர்கள் தெளிவுபடுத்தவில்லை. ஆகவே இவர்களை குழப்பவாதிகள் என்றும் அராஜகவாதிகள் என்றும் நிதி மூலதனத்தின் ஆதரவாளர்கள் வர்ணிக்கின்றனர். இது குடிமை ஒத்துழையாமை இயக்கமா அரசியல் ஒத்துழையாமை இயக்கமா என்பது குறித்தும் விவாதங்கள் இருக்கின்றன. இந்த இயக்கத்தில் பங்குகொண்டிருக்கும் பெரும்பாலானவர்கள் இன்றைய அரசியல் அமைப்பின் மீது பெரும் அவநம்பிக்கை கொண்டிருப்பது தெரிகிறது. முதலாளித்துவத்தின் காவல் நாயாக இருந்த அமெரிக்க அரசாங்கம் இன்று நிதி மூலதனத்தின் ஏவல் நாயாகப் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. இது அமெரிக்க முதலாளித்துவப் பரிணாம வளர்ச்சியின் உச்சமா இன்னும் மீதமிருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் பல்வேறுவிதமான அரசியல் நம்பிக்கைகளைக்கொண்டவர்கள், ஆனால் இன்றைய அமெரிக்க அரசியலின் மீது நம்பிக்கை இழந்தவர்கள்.
வால் ஸ்ட்ரீட்டிற்கு அருகே உள்ள Zuccotti பூங்காவில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் நாள்கணக்கில் தங்கிப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்க அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதே போன்று போராட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும், இன்று இந்த இயக்கம் அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பாவின் நூற்றுக்கணக்கான நகரங்களுக்குப் பரவியிருக்கிறது. இந்த இயக்கத்தின் எதிர்காலம் என்னவாகும், என்ன வடிவத்தை இது எடுக்கக் கூடும் என்று யாராலும் இப்போது கூற முடியாது. இவர்களிடம் கறாரான மாற்றுத் திட்டம் ஏதுமில்லை என்பது உண்மை. ஆனால் இன்றைய அமெரிக்க அமைப்பை நிராகரித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மக்கள் இயக்கங்கள் கறாரான திட்டங்களை முன்கூட்டியே கையில் வைத்திருக்க முடியாது. ஒபாமாவின் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்றும் தெரியவில்லை. எதுவுமே நடக்காததைப் போல், எந்த மாற்றமுமின்றி இன்றிருப்பது போலவே அமெரிக்க அரசாங்கம் செயல்பட முடியாது என்பது மட்டும் உண்மை.
அரேபிய வசந்தமும் சரி, இந்திய வசந்தமும் சரி அந்த மக்கள் எதிர்பார்க்கும் பலனைத் தருமா எனச் சொல்ல முடியாது. அரேபிய வசந்தம் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் சிறந்த மக்களாட்சியைக் கொண்டுவருமா, அப்படி வராவிடின் மீண்டும் அந்த நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்படுமா என்பதை இப்போதே கணிப்பது கடினம். இஸ்லாமும் மக்களாட்சி விழுமியங்களும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று முரணானவை என்ற மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட வாதம் தவறு என்பதை அரேபிய வசந்தம் நிரூபித்திருக்கிறது. அமெரிக்கக் கனவு - அதாவது ஒருவர் கடினமாக உழைக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் அவருக்கு வெற்றி நிச்சயம், அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி - என்பது பொய்; மாறாக அங்குள்ள பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்வு உண்மையில் ஒரு கொடுங்கனவாகவே இருக்கிறது என்பதை வால் ஸ்ட்ரீட் போராட்டம் நிரூபித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: