புதன், 29 ஜூன், 2011

மஹோற்சவ கிரியைகளும் அதன் விளக்கமும்


உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர்.

நைமித்திக உற்சவங்களில் சிறந்தது மஹோற்சவம் என்று சிறப்பித்துச் சொல்லப் பெறும் பிரமோற்சவமாகும். நித்திய கிரியைகளின்போது
ஏற்படும் குற்றம் குறைகளுக்குப் பிராயச்சித்தமாக அமைவது இந்த மஹோற்சவமாகும்.

கொடித்தம்பம்:
மஹோற்சவம் நிகழ்வதற்குக் கொடிமரம் அவசியம். இது நந்தி, பலிபீடம் என்பவற்றையடுத்து மனிதனின் முள்ளந்தண்டை நிகர்ந்து நிமிர்ந்து நிற்கும். மூங்கில், கருங்காலி, வில்வம்,தேவதாரு, பலாசு, தென்னை முதலிய மரங்களுள் ஒன்று கொடிமரமாகப் பயன்படித்தப்பெற்றிருக்கும். உலோக தகடுகளால் போர்த்தப்பெற்று மேலே கொடிச்சீலை விரிந்து நிற்கத்தக்க அமைப்புக்களையும் கொண்டதாக உருவாக்கப்பெற்றிருக்கும்.

நிலமட்டத்திலிருந்து கர்பக்கிரக விமானத்தின் (ஸ்தூபியின்) கலச மட்டம் வரையிலான உயரமே கொடிமரத்தின் உயரமாகும். இதன் அடியிலுள்ள சதுரவடிவமான பாகம் பிரம்மபாகம். அதன் மேலுள்ள எண்கோன அமைப்பு விஷ்ணுபாகம். அதற்கு மேல் விருத்தமாக அமைவது ருத்ரபாகம்,

கொடிச்சீலை:
கொடிமரத்தில் ஏற்றப்பெறும் கொடிச்சீலையின் நீளம் தம்பத்தின் உயரத்தைப்போல் இரு மடங்கு உடையயதாக இருக்க வேண்டும். 


அதன் ஒன்பதில் ஒருபாகமாக எடுத்த சதுரத்தில் மேலந்தத்திலிருந்து அந்த ஆலய மூர்த்தியின் வாகனம் படத்தின் மையத்தில் வரையப்பெறும். அதன் முதுகில், அவ்வாலய மூர்த்தியின் அஸ்திரதேவர் வரையப்பெறும். இது ஆன்மா மலபரிகாரம் அடைந்ததைக் குறிக்கும். இவற்றைவிட சூரிய சந்திரர்களும், அஷ்ட மங்கலப் பொருள்களும் வரையப் பெற்றிருக்கும்.


சித்தாந்தக்கருத்துக்கள்:
இப்படம் தெளிவாகத் தெரியும் வண்ணம் மேற்புறத்தில் குறுக்குச் சட்டம் ஒன்று கட்டப்பெற்று அதன்மேல் கொடியேற்ற உதவும் கயிறு கட்டப்பெறுவதற்கமைவாக மேற்பாகம் முடிச்சாக அ,ஐக்கப் பெறும். அம்முடிச்சு பிரம்மக் கிரந்தி எனப்பெறும். இதில் இணைக்கப்பெற்று கொடியை ஏற்றப் பயன்பெறுகின்ற மஞ்சட்கயிறு ஆன்மாவை இறைவனிடம் சேர்ப்பிக்கும் திருவருட்சக்தியாகும். கொடித்தம்பம் பதியாகிய இறைவனையும், கொடிச்சீலையிலுள்ள நந்தி (அல்லது அவ்வாலய மூர்த்தின் வாகனம்) பக்குவமடைந்த ஜீவான்மாவாகிய பசுவையும் குறிக்கும். இடையேகாணப்பெறும் தற்பைக்க்யிறு பாசமாகிய மும்மலங்களாகும். பக்குவான்மாவை வழிநடத்தும் திரோதான சக்தியை க் கொடிச்சீலை குறிக்கின்றது.

ஆன்மாவைப் பதிந்து நிற்கின்ற பாசமலங்கள்; ஆன்மா பக்குவமடைந்து திருவருட்டுணையால் இறைவனைச் சேரும்போது வலிகுன்றி வாளாவிருக்கும். (இல்லாமல் போவிடுவதில்லை) இடையே அங்கிருக்கும் தர்ப்பைக் கயிறு காட்டுகின்றது.

கொடியேற்றியதும், திருவருட் சக்தியாகிய நூற்கயிறும்,பாசமாகிய தர்ப்பைக் கயிறும், திரோதான சக்தியாகிய கொடிச்சீலையும் அதில் வரையப்பெற்றுள்ள ஆன்மாவாகிய நந்தியும் தம்பத்தோடு சுற்றப்பெற்று அதனோடு ஐக்கியமாகி மறைய, இறைவனை விட வேறாக ஒரு பொருள் இல்லை என்ற உண்மை தெளிவாகின்றது.


பூர்வாங்கக் கிரியைகள்:

மஹோற்சவ ஆரம்ப தினமாகிய துவஜாரோகண தினத்திற்கு (கொடியேற்ற நாளுக்கு) முதல் நாள் மாலையிலே சில பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகிவிடும். ஆசாரிய வரணம் முதல் அங்குரார்ப்பணம் வரையிலான சிரியைகள் முதல் நாளிலே நடைபெரூவது நன்று.சில இடங்களில் மிருத் சங்கிரகணம், அங்க்ரார்ப்பணம் இரண்டையும் கொடியேற்றும் நாளிலே செய்தலும் உண்டு


ஆசார்ய வரணம்:

வரணம் என்பது வரிதல். மஹோற்சவக் கிரியைகள் நடத்துவதற்குரிய குருவினை வரிதல், அதாவது நியமித்தல் என்பதே இக் கிரியையின் பொருள் (நியமித்தல் என்பது அதிகார தோரணையில் கட்டளையிடுதல். ஆனால் வரிதல் என்பது அக்காரியத்தை செய்யும்படி வேண்டுதல்).
ஆலய தர்மகர்த்தா, உபயகாரர் ஆகியோர் குருவின் இல்லத்திற்கு மங்கலப் பொருட்கள் சகிதமாக, மங்கள வாத்தியங்களுடன் செல்வர். சாயங்கால சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மானுஷ்டானங்களை முடுடித்து ஆசார்ய லட்ஷணத்துக்கமையத் தம்மை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பிரதான குருவையும், சாதகாசாரியர் உதவியாளர் யாவரையும் வணங்கி வீதிவலமாக ஆலயத்திற்கு அழைத்து வருவர்.

மண்டபத்திலே அமர்ந்து விநாயகரைத் துதித்து ஆசமனம், பிணாயாமம், சங்கல்பம் முதலியன செய்தவுடன் உபயகாரர் நமஸ்கரித்து மஹோற்சவத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு வேண்டுவர்.

ஆரம்பக் கிரியைகள்:

குருவை அழைத்து வந்ததும், சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, சமளீகரணம், சாமான்யார்க்கியம், புண்ணியாகவாசனம் என்பவற்றைச் செய்வர்.

அநுஜ்ஞை:
அநுஜ்ஞை என்பது அனுமதி பெறுதல் ஆகும். ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி அதில் தேங்காய், வாழைபழம், வெற்றிலை பாக்கு, சந்தணம், மஞ்சள், நாணயம், புஷ்பம், பத்திரம், தர்ப்பை என்பனவற்றை வைத்து அவற்றைப் புண்ணியாக தீர்த்தத்தினால் தூய்மைப்படுத்தி அவற்றுக்குப் பூசை நிகழ்த்துவர்.

அங்கு வந்திருக்கும் பிராமணோத்தமர்களிடமும், விக்கினேஸ்வரப் பெருமானிடமும், மூலமூர்த்தியிடமும், அஸ்திரதேவரிடமும், உற்சவமூர்த்தியிடமும் சென்று பூஜை செய்து மஹோற்சவத்தை நன்முறையில் நடத்த அனுமதியும் ஆசியும் தந்தருளுமாறு வேண்டுவர்.

கிராம சாந்தி:

ஆலயம் அமைந்துள்ள கிராமத்திலுள்ள தீய சக்திகள், துஷ்டதன்மைகள் முதலியவற்றால் பெருவிழாவிற்கு இடையூறு ஏற்படாமல் மங்கலம் உண்டாகும்படி காவற் தெய்வமாகிய வைரவப் பெருமானுக்கு விஷ்ட பூசி, ஓமம், பலி என்பன செய்தலே கிராம சாந்தியாகும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு பகைகள் முதலியவற்றால் ஏற்படும் தீமைகளும்; அஸ்ரீஅர், இராட்சசர், பூதர், பைசாசர் என உருவகப் படுத்தப் பெறுகின்றன. எவையானாலும் தீயனவற்றை ஒழிப்பதே கிராமசாந்தி.

இதைப் புரிந்துகொள்ளாத பலர்; மஹோற்சவத்திற்கு முதல் நாள் பேய், பிசாசுகளை கட்டி வைப்பதாகவும்; கொடியிறக்க நாளில் அவிழ்த்து விட்வதாகவும் கூறுவர். இக் கிரியைகளின் போது சிறுவர்களை அருகே வரக்கூடாது எனப் பயமுறுத்துவர். சிலர் இக் கிரியைகளைத் தரிசிக்காமல் விலகிக் கொள்வதுமுண்டு.
தெய்வ காரியங்களீல் இப்படிப் பயப்படும்படியான கிரியைகள் எதுவுமில்லை என்பதை யாவரும் உணர்ந்து இக் கிரியைகளின் உட்பொருளை அறிய முற்பட வேண்டும். கிராமசாந்திமூலம் கிராமத்தின் காவலை உறுதிப்படுத்த வைரவரிடம் வேண்டுதல் நடத்துவது போலவே மஹோற்சவ இறுதியில் வைரவரை மகிழ்விக்கும் வகையில் வைரவர் மடை நடாத்துவதும் கவனிக்கத்தக்கது.

ஆலயத்தின் கிழக்கு, மேற்கு அல்லது நிருதி திசையில் ஒரு தற்காலிக மண்டபம் அமைத்து வைரவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பம் வைத்து ஒழுங்கு செய்தபின் அஸ்திரதேவரை மங்கள வாத்திய சகிதம் வீதி வலம் வரச்செய்து அங்கு எழுந்தருளச் செய்வர். கும்பங்களை மட்டுமின்றி யந்திரங்களை வைத்து அவற்றிலும் வைரவர் முதளானோரை ஆவகனம் செய்து பூசைகள் நிகழ்த்துவர். ராட்ஷசர் முதலானோருக்குப் பலி உருண்டைகள் வழங்கித் திருப்தி செய்தபின் வைரவரை அக்கினியிலும் ஆவாகனம் செய்து அன்னம், வடை முதலியனவும் ஆகுதியாக இடுவர். பலிப் பொருளான நீற்றுப் பூசனிக்காய், கத்தி ஆகியவற்றையும் பூஜித்து பசுகாயத்ரியை உச்சரித்து, நீற்றுக்காயை வெட்டிப் பலி கொடுத்து அதன் உட்பாகத்தை ஓமம் செய்வர். பூர்ணாகுதி கொடுத்தபின் சக தேவர்களுக்கும் தாம்பூலம் நைவேத்தியம் செய்து நீராஜனம் செய்தபின் சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளிவிப்பர். இதன் பின் வலம் வந்து கைகாகளைச் சுத்தம் செய்தபின்னர் ஆலயத்தினுள் செல்லுதல் மரபு.

பலி கொடுக்கும்போது சொல்லப் பெறும் மந்திரத்தின் பொருள் ஆபத்துகளை நீக்கும் வடுக வைரவரே, எல்லோரையும் காப்பவரே, எல்லாப் பயங்களையும் போக்குபவரே, வெப்பசுரம், குளிர்சுரம் முதலிய கொடிய நோய்களை நீக்குபவரே, புத்திர லாபத்தைத் தருபவரே, எல்லா உயிரினங்களையும் காத்தருளும், எல்லாக் கெட்ட பிராணிகளையும் அழித்தருளும். இந்த பலியினை ஏற்றருள்க


வாஸ்து சாந்தி:

நிலத்தில் உள்ள குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்பெறுவது வாஸ்து சாந்தி என்னும் கிரியை. பூமிக்கு அதிபதி பிரமாவை மகிழ்வித்து வழிபாடியற்றுவது வாஸ்து சாந்தியில் இடம்பெறுகிறது.  வாஸ்து சாந்தி ஆலய மண்டபத்திலே செய்யப் பெறுகின்றது.

வாஸ்து சாந்திக்குரிய வாஸ்து மண்டலம்; நெல்லினை மேடையாகப் பரப்பி அதன்மேல் வாழையிலை இட்டு அதன் மேல் அரிசியைப் பரப்பி அதன்மேல் எள்ளினால் அல்லது அரிசி மாவினால் கோடுகள் வரைந்து அமைக்கப்பெறும். இவ் மண்டலம் இரு வகையாக அமைக்கப் பெறும். ஆண் தெய்வங்களுக்கு உரியது மண்டூகபத வாஸ்து சாந்தி மண்டலம். பெண்தய்வங்களுக்குரியது பரமசாயிபத வாஸ்து சாந்தி மண்டலம். சக்தி அம்சமான முருகனுக்கும் இதுவே உரியது.

இம் மண்டலத்துக்கு ஈசான திக்கில் காயத்திரி, சாவித்திரி ஆகிய இரு சக்திகளுடன் கூடிய பிரம்மவிற்கும், சிவம் வர்த்தனிக்கும், மண்டலத்துக்கு கிழக்கில் புண்ணியயாக வாசனத்துக்கும் கும்பங்கள் வைத்து அதன் முன் ஓமகுண்டம் அமைக்கப் பெற்றிருக்கும்.

இங்கும் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் முதலிய பூர்வவாங்கக் கிரியைகளைச் செய்து சிவம் வர்த்தனியையும், பிரம்மாவையும் கும்பத்தில் பூஜித்து மண்டலத்தில் வாஸ்து புருசனையும் பிற தேவதைகளையும் பூஜித்து நெற்பொரியினால் பலிதானமும் கொடுத்து முறைப்படி அக்கினி காரியமும் செய்வர்.

இங்கு கிராமசாந்தியைப் போலவே நீற்றுக்காயொறைப் பலியிடுவர். அதன் பின் வைக்கோல், தர்ப்பை முதலியவற்றால் மனித உருவாகச் செய்யப்பெற்ற வாஸ்து புருசனைப் பூஜித்துப் அக்கினியில் பொருத்தி எரிமூளச் செய்தபின் அவ்வுருவத்தை ஆலய மண்டபங்கள், வீதிகள் முதலிய இடங்களில் இழுத்து வந்து ஈசான திக்கில் போட்டு விடுவர். இவ்வுருவத்தின் பின்பாக வாஸ்து கும்ப நீர் தெKஇத்துச் செல்வர். வெட்டிய நீற்றுப் பூசணிக்காயையும் இதனுடன் எடுத்துச் சென்று போட்டுவிடுவர். இவற்றைக் கொண்டு சென்றவர்கள் நீராடிவிட்டு ஆலயத்தினுள் வருதல் வேண்டும். (கை கால்களையாவது நன்கு சுத்தம் செய்தல் அவ்சியம்)


மிருத்சங்கிரகணமும் அங்குரார்ப்பணமும்:

ஐந்தொழில் விளக்கமாகிய மஹோற்சவத்தில் படைத்தலைக் குறிப்பான இவையிரண்டும். நற்காரியங்கள் எதனையும் தொடங்கும்போது முளைப் பாலிகையிடுதலாகிய அங்குரார்ப்பணம் மிக முக்கியமாகச் செய்யப் பெறும். இதற்கு வேண்டிய மண்ணை மந்திர சகிதமாகப் பெறுவதே மிருத்சங்கிரகணமாகும் (மிருத் மண்; ச்ங்கிரணம் சேகரித்தல்). ஆலயத்தின் ஈசானம், மேற்கு, வாயு அல்லது வடக்குத் திசையில் இது செய்யப் பெறும். அஸ்திர தேவரையும் எழுந்தருளச் செய்து மங்கள வாத்திய சகிதம் குரு இங்கு வந்து சேருவார். அஸ்திர தேவரையும், அதற்கு முன் (கிழக்கே) சப்தவாரிதி கும்பத்தையும் ஸ்தாபிப்பர். அதற்கு கிழக்கே நவபதம், அதற்கும் முன் அஷ்டதள பத்மம் (எட்டிதழ் கமலம்); அதற்கு முன் நாற்கோணம் என்பனவற்றை அரிசிமாவினால் அமைப்பர். நாற்கோணத்தில் மண்வெட்டி ஒன்று கூர்ச்சம், மாவிலை என்பன கட்டப்பெற்றதாக வைக்கப் பெற்றிருக்கும்.

பூர்வாங்க கிரியைகளை நிறைவேற்றியபின், கும்பத்திலே ஏழு சமுத்திரங்களையும், நவகோஷ்டத்தில் பிரம்மாவையும் எட்டு மண்டல தேவர்களையும், பத்மத்திலே அட்டதிக்குப் பாலகர்களையும் பூமிதேவியையும் பூஜிப்பர். மண்வெட்டியின் குற்ற நீக்கத்திற்காக தைலம், பால், தயிர்,இளநீர் என்பனவற்றால் அபிஷ்கித்த பின் மும்முறை மண்ணை வெட்டி ஒரு தட்டிலிட்டு பட்டினால் மூடுவர். சப்தரிஷி கும்ப ஜலத்தினால் மண் எடுத்த இடத்தை அபுஷேகம் செய்து நவதானியமிட்டு சமதளமாக்குவர்.

தெய்வ காரியத்தின் பொருட்டு இங்கே மண் எடுக்கிறேன் என்னை மன்னித்து எனக்கு அனுமதி தருகஎன்று பூமாதேவியைப் பிரார்த்தனை செய்வதும் மண்வெட்டிய இடத்தை மீண்டும் சமதள்மாக்கி அங்கு நவதானியம் இட்டு ஏழுகடல் நீரினால் (சப்தவாரிதி கும்பம்) நீராட்டுவது முதலிய அம்சங்களில் காணப்பெறும் இயற்கை நேயமும் மனித மேம்பாட்டுணர்வுகளும் கவனிக்கத்தக்கன. மேலும் இங்கு ஓதப்பெறும் பூசூக்தம், ஓஷதி சூக்தம் முதலிய வேத மந்திரங்கள் அற்புதமான உட்பொருள்கள் கொண்டவை இயற்கையைப் போற்றித் துதிப்பவை.

யாகசாலையின்  பின் வாயுதிக்கிலே (வட-மேற்கு) கார்த்திக, உரோகினி சகிதமாக அமிர்தேஸ்வர கும்பம் வைத்து (அமிர்தேஸ்வரன் சந்திரன்) சுற்றிவர துவாதசாத்தியர்களுக்கு (பன்னிரு சூரியர்) பன்னிரண்டு சிறிய மண்சட்டிகளும் வைக்கப் பெற்றிருக்கும். மிருத்சங் கிரகணத்தில் எடுத்துவந்த மண்ணினால் இவை நிரப்பப் பெற்று வில்வம், அரசு, மாவிலை இவற்றால் அலங்கரிக்கப் பெறும்.

பூர்வாங்கக் கிரியைகளை அடுத்து சந்திரனையும், பன்னிரு சூரியர்களையும் பூஜித்தபின் தூய்மையான பாத்திரம் ஒன்றிலே பசுப்பால் விட்டு அதில் அதில் நவதானியத்தை இட்டு பூஜித்து உரிய மந்திரங்களுடன் பாலிகைகளில் (மண்சடிடிகள்) அதனை விதைப்பர். சந்திரகும்ப நீரை இவற்றிற்கு வார்த்து மீண்டும் கும்பத்தை நீரால் நிரப்பி ஸ்தாபிப்பர். இவ்வங்குரார்ப்பண முளையானது பசுமையாக நன்கு செழித்து வளர்ந்தால் கிராமம் சிறக்கும் என்பது ஐதீகம் (அங்குரம் முளை).

இவற்றுடன் முதல் நாள் கிரியைகள் நிறைவு பெறும். மறுநாள் காலை ரட்ஷாபந்தனத்துடன் துவஜாரோகண விழா ஆரம்பமாகும்.


ரட்ஷாபந்தனம்:
ரட்ஷா என்பது காப்பு. காவலுக்காக கட்டப்பெறுவது. காப்புக்கட்டுதல் எனவும் கூறுவர். எடுத்த கருமம் தடையின்றி நிறைவேறுதற்கும், அக்கருமமன்றி வேறு செயல்களில் ஈடுபடாது தடுப்பதற்கும் காப்பு கட்டப் பெறும்.

சிவாச்சாரியாரும், தர்மகர்த்தாவும் ரட்ஷாபந்தனம் செய்துகொண்டபின் உற்சவம் முடியும் வரை ஆலயச் சூழலை விட்டு அப்பாற்செல்லலாகாது. இக் கால எல்லையில் அவர்களின் உறவினரால் ஏற்படும் ஆசௌசம் (துடக்கு) முதலியன அவர்களைத் தீண்டா.

காவலுக்காக கட்டப் பெறும் காப்பு மூர்த்திகளுக்கும் கட்டப் பெறுவது வழக்கம். எல்லா உலகங்களையும் காக்கும் அவருக்கே காவலா என ஐயுறலாம். சகல பிரஞ்சங்களும் இறைவனுள் அடங்கும். அவருள் அடங்கிய அனைவருக்கும் காவல் செய்யும் காரணமாகவே அத் திருவுருவங்களுக்கு காவல் செய்யப் பெறுகின்றது. மேலும் தன் குழந்தைகளின் நோய் தீரத் தான் மருந்துண்ணும் தாய் போல நமக்காக இறைவன் காப்புக்கட்டும் பாவனையும் இதில் தொனிக்கிறது.

கங்கணம் கட்டுதல்என்ற மரபுச் சொற்றொடர் இங்கு நோக்கற்பாலது. ஒரு காரியத்தை விடாது முயன்று செய்துமுடிக்கத் தீர்மானிப்பதைக் கங்கணம் கட்டுதல் என்று சொல்லுவர். கங்கணம் என்பது காப்பு. எடுத்தகாரியத்தை நிறைவேற்றி முடிக்கும் ஆயத்தம் கொள்வது இக்கிரியையின் நோக்கம் எனவும் கொள்ளலாம்.

ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் தேங்காய், வெற்றிலை-பாக்கு, பழம், மாவிலை, விபூதி என்பனவும்; ரட்ஷா சூத்திரம் (மஞ்சள் பூசிய காப்புக்கயிறும்) வைக்கப் பெற்றிருக்கும்.

துவஜாரோகண் தினத்தன்று காலையில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்கள் யாவும் நிறைவேற்றிய சிவாச்சாரியார்; வழமையான நித்திய பூஜைகள் யாவும் முடித்துப் பூர்வாங்க கிரியைகளையும் செவ்வனே நிறைவேற்றிய பின் ரட்ஷாபந்தன் பொருகளைப் பூஜிப்பர். இதன்பின் மங்கள வாத்தியங்கள் முழங்க; சிவாச்சாரியார் தனது வலக்கை மணிக்கட்டில் ரட்ஷை நூலைக் கட்டி விபூதியால் முடிச்சிலே காப்பிட்டுக் கொள்வார். இதன் பின் சகல மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப் பெற்றும். இதனைப் பெரும்பாலும் ஸ்நபன கும்ப பூஜையின் பின் அபிஷேகம் செய்யும் போது செய்வதே வழக்கம்.

ஸ்நபன கும்ப பூஜைகள்:

துவஜாரோகணத்திற்குரிய கொடிப்படம், தம்பம், அஸ்திரதேவர், நந்தி, பலிபீடம் முதலியவற்றுக்கும், மூலமூர்த்துகளுக்கும் விசேஷ அபிஷேகங்கள் செவதற்காக ஸ்நபன கும்பங்கள் மண்டபத்திலே வைக்கப் பெறும். கொடிச்சீலைப் படத்திலுள்ள அஸ்திர தேவப் பிரதிஷ்டைக்கும், நந்திக்கும், பலிபீடத்திற்கும் கும்பங்கள் வைக்கப் பெறும். இவற்றைவிட; சாந்திகும்பம், யாகேஸ்வரன், யாகேஸ்வரி (சிவம் வர்தனி) கும்பங்கள் என்பனவும்; ஓமகுண்டமும் தயாராக அமைக்கப் பெற்றிருக்கும். மண்டபத்தின் ஒரு புறத்திற் கொடிப்படம் கட்டப் பெற்றிருக்கும்.
கும்பங்கள் யாவற்றுக்கும் பூஜைகள் செய்து அக்கினி காரியம் செய்வர். கொடிப்படத்திற்குப் புண்ணியாகநீர் தெளித்து பிம்பசுத்தி செய்தபின் அதிலுள்ள நந்திக்கு நயோன் மீலனம் (கண் திறத்தல்) செய்யப் பெறும். ரட்ஷாபந்தனமும் கொடிப்படத்திற்குச் செய்யப் பெறும்.


பூர்வசந்தானமும் பச்சிமசந்தானமும்:

கொடிச்சீலைப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் இரண்டையும் பிரதிஷ்டை செய்தற் பொருட்டு (அதாவது அங்கு தெய்வ சாந்தியத்தை ஏற்படுத்துவதற்காக) இரண்டு வகை ஜிரியைகள் செய்யப் பெறுகின்றன. முதலில் பசுபோதத்தை நீக்குவதற்காகச் செய்யப்பெறுவது பூர்வ சந்தானம். இதன் பின் அக்கினியிலும், கும்பத்திலும் பூஜித்த தெய்வ சாந்நித்தியத்தைப் படத்திலே ஒடுக்குவது பச்சிம சந்தானம்.

அக்கினி கும்பத்திலிருந்து கும்பம், படம், மூர்த்தியின் திருவுருவம் என்பவற்றை இணைக்கும் வகையில் இடப்பெறும் நூல் நாடீசந்தானம் எனப்பெறும். இந்நூலின் வழியாக தெய்வ சாந்நித்தியத்தை அக்கினியில் இருந்து படத்திற்கு எழுந்தருளச் செய்வர்.
திருவுருவத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து; பிரம்ம பாகம் (கீழ்ப்பகுதி), விஷ்ணு பாகம் (மத்திய பகுதி), ருத்திர பாகம் (மேற்பகுதி) என்று பாவித்து மும்முறை ஸ்பர்சாகுதி செய்வர். ஆத்மதத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்னும் தத்துவங்களையும் அவற்றின் அதிபதிகளையும் பிருதுவி முதலிய அஷ்ட மூர்த்திகளையும், அவற்றின் அதிபதிகளையும் இங்கு பூஜிப்பர். இவ்விதம் பிரதிஷ்டைகள் நிறைவேறியதும் அக்கினியில் பூர்ணாகுதி கொடுத்து ரட்க்ஷை (கரிப் பொட்டு) எடுத்து கும்பங்கள் படம் யாவற்றுக்கும் இடப்பெறும்.

அபிஷேக ஆராதனைகள்:

அதன் பின் கும்பங்களை வீதிவலமாக கொண்டு வந்து அபிஷேகம், அலங்காரம் என்பன நிறைவேற்றித் தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும். உற்சவ மூர்த்திக்கு (எழுந்தளுளி மூர்த்தி) விசேட பூஜைகள் நடத்தி எழுந்தருளுவித்து கொடித்தம்பத்தை பார்த்த வண்ணம் வடக்கு முகமாக இருக்கச் செய்வர்.

பேரீதாடனம்:
நாததத்துவமே பிரபஞ்ச சிருஷ்டிக்கு மூலகாரணம். நடராஜ மூர்த்தியின் வலக்கரமொன்றில் இருக்கும் உடுக்கிலிருந்து பிறக்கும் ஓசையே ஒலிகள், மொழிகள், இசைகள் என்பனவற்றிற்கும் சகல சிருஷ்ட்டிக்கும் ஆதாரமாக இருக்கின்றது. சரஸ்வதி வீணை வாசிப்பதும், கண்ணன் வேய்ங்குழல் ஊதுவதும், நாரதர் தம்புரா இசைப்பதும், நடராஜ தாண்டவத்தின் போது மகாவிஷ்ணு தாளம் கொட்டுவதும், நந்தி மத்தளம் வாசிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.

இங்ஙனம் படைத்தல் தொழிலைக் குறிக்கும் கொடியேற்ற விழா ஆரம்பத்தில் நாத தத்துவத்தை பேரீ எனப்பெறும் மேளத்தில் பூஜித்து, மந்திர சகிதமாக குரு; மேளத்தில் ஒலியெழுப்பி சகல தேவர்களையும் அங்கு எழுந்தருளும்படி வேண்டுதலே பேரீதாடனமகும்.

மேளம் அடிக்கும் கம்பினைச் சிவசக்தி ரூபமாகப் பாவனை செய்து சிவாச்சாரியார் அதனை எடுத்து வேதமந்திரங்களைக் கூறீ முறையே ஒருமுறை, இருமுறை, மும்முறை என்ற வகையில் மேளத்தை அடித்துப் பின்னர் முத்துமாரி அம்பாளின் மஹோற்சவ விழாவை நடத்துவதற்காக சகல தேவர்களையும் இங்கு அழைக்கிறேன். சகல மங்கள் வாத்தியங்களையும் இப்போது ஆரம்பித்து வைக்கிறேன்என்று பிரார்த்திப்பார். பேரீதாடனம் என்னும் இக்கிரியை சில இடங்களில் கும்பபூஜை ஆரம்பமாகும் போதெ செய்யப்பெற்று விடுவதுண்டு.

துவஜஸ்தம்ப ஆவாகணம்:

அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து ஆவாகனம் செய்தபின், கொடிக்கம்பத்தினச் சாந்தி கும்பநீரால் புரோஷித்து ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்பனவற்றையும், நான்கு வேதங்களையும் தம்பத்தில் பூஜித்து ரட்ஷாபந்தனம் செய்து சாந்தி கும்பத்தினால் அபிஷேகம் செய்யப் பெறும். ஆலய மூலமூர்த்தியைத் தம்பத்திலே ஆவாகனம் செய்து எழுந்தருளிவித்து ஏற்கனவே ஸ்தாபித்து வைத்த ஸ்நபன கும்பங்களால் அபிஷேகம் செய்வர்.

இதன் பின்னர் கொடிப்படத்தை வீதிவமாகக் கொண்டுவந்து கொடியிலிணைக்கப்பெற்றுள்ள மஞ்சட் கயிற்றைத் தம்பத்தின் நுனியிலிணைத்துப் படம் தெரியும்படியாகக் கட்டி வைத்துப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் ஆகியவற்றுக்கென ஸ்தாபித்த கும்பங்களினால் புரோக்ஷித்து, அபிஷேகம் செய்யும் பாவனையிற் கண்ணாடியைப் படத்திற்கு முன் பிடித்து அதில் அபிஷேகம் செய்வர். தம்பத்திலும், அதைச் சுற்றிலும் சகல தேவர்களையும் பூஜிப்பர்.

சமஸ்த தேவதாவாஹனம்:

சகலவிதமான தேவர்களையும் பெயர் சொல்லி அழைத்து மஹோற்சவ காலத்தில் தத்தம் பரிவாரங்கள் குழு எழுந்தருளுமாறு அழைப்பதே சமஸ்ததேவதா ஆவாகனம். எல்லா வாத்தியங்களையும் நிறுத்திவிட்டு சாதகாசிரியர் இசையோடு இதை வாசிக்கும்போது கேக்க இனிமையாக இருக்கும்.

துவஜாரோகணம்(கொடியேற்றம்):

சிவாச்சாரியார் சங்கல்பம் செய்து நவக்கிரகங்களை மகிழ்விக்கும் வகையில் தானம் வழங்கி, நடைபெறவுள்ள காரியம் தடையின்றி நிகழும் பொருட்டு யாத்ரா தானம் வழங்கி, மூலவருக்குப் பஞ்சாராத்திரிகம் காட்டி வணங்கி விநாயகரை நினைத்துத் தேங்காய் உடைத்துவிட்டு ஏகாக்ர சித்தமாக (ஒரே சிந்தனையுடன்) தம்ப நுனியைக் கொடிப்படம் சேரும்வரை மெதுவாக கொடியை ஏற்றுவார். சிவாச்சாரியார் கொடிச்சீலையைப் பற்றி அது ஒழுங்காக மேலேற வகை செய்ய, உதவியாளர் கொடிக் கயிற்றைப் பற்றி மெல்ல இழுத் ஏற்றுவது மரபு. கொடிச்சீலையுள் மஞ்சள் கயிறு மறையும்படி வைத்து அதனைப் பலமாக முறுக்கி, தற்பைக் கயிற்றையும் அதனுடன் சேர்த்துத் தம்பத்தில் வலமாக மூன்று முறையாவது ஐந்து முறையாவது  சுற்றப்பெறும். இறுதியில் மூலமூர்த்தியை நோக்கியிருக்குமாறு மேற்குப் பக்கத்தில் பிரம்மக்கிரந்தி முடிச்சு இட்டுப் பட்டுகள், மாவிலை, கூர்ச்சம் என்பனவற்றையும் வைத்து அலங்கரிப்பர்.

துவஜஸ்தம்ப பூஜை:

இதன் பின் தைலக்காப்பு முதல் பன்னீர் ஈறாக சகல விதமான அபிஷேகங்கள் செய்து அலங்கரித்துத் திக்பாலகர் முதலானோருக்குத் தேங்காய்ப் பிரமாணத்தில் அன்ன உருண்டையை பலியாக வழங்கி, நைவேத்திய தூப தீபாராதனைகள் நடத்துவர். அதன் முடிவில் அழகிய சுலோகங்கள் அமைந்த பணிமாலா முதலிய தோத்திரங்களைச் சொல்வர்.
மூர்த்திகளின் சிறப்பியல்புகளைத் தாள லயத்தோடு அழ்லிய வாக்கியங்களில் அமைத்துச் சொல்வது தாளம் எனப்பெறும். ஒவ்வொரு மூர்த்திக்கும் இத்தகைய தாளங்களும், அவரவர்களுக்கு விருப்பமான வேதப்பகுதி, தேவாரப்பண், தாளம், வாத்தியம், நிருத்தம், ராகம் என்பனவும் கூறப்பெற்றுள்ளன. அவற்றை உரிய இடங்களில் பயன்படுத்துவர்.
துவஜஸ்தம்ப பூஜையும், தோத்திரமும் முடிந்ததும் கணபதி தாளம் முதலில் சொல்லப்பெறும். அவருக்குரிய வேதம், பண், ராகம் முதலியன இசைக்கப் பெற்றதும்; மூலமூர்த்தியின் வாகனத்துக்குரிய தாளம் (விருஷப தாளம், மூஷிக தாளம், சிம்ம தாளம், மயூர தாளம் முதலியன) இசைக்கப் பெறும். இதன் பின் அஸ்திர தேவருக்கும் சுற்றுப்பலி போடப்பெறும். பலிபீடமும் பூஜிக்கப் பெறும்.

ஆசீர்வாதம்:
ஆலயத்திற்கும், கிராமத்திற்கும், நாட்டிற்கும், ஆலய பரிபாலகர்களுக்கும், எசமானர்களுக்கும்,பக்த ஜனங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் சர்வ மங்களமுண்டாகிச் சகல செல்வபோகங்களும் நிறைந்து, இறுதியில் முக்தியின்பம் பெற வேண்டுமென்றும் வாழ்த்தி விண்ணப்பிப்பதே ஆசீர்வாதமாகும்.
ஒவ்வொரு ஆசீர்வாத வாக்கியங்களையும் சிவாச்சாரியர் கூற ஏனைய குருமார்கள் (பிராம்மணோத்தமர்கள்) ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்று தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைக் கூறுவர்.

சந்தியாவாஹனம்:
மூலமூர்த்திக்கு நேரெதிராகக் கோபுரவாசலுக்கு அண்மையில் பிரம்மசந்தி எனப்பெறும் ஸ்தானமும், கிழக்கு முதல் ஈசானம் வரையிலான எட்டுத் திசையிலமைந்த ஸ்தானங்களும் நவசந்திகள் எனப்பெறும். இவ்விடங்களில் அந்தந்த சந்திக்குரிய தேவர்களை மகிழ்வித்து அவர்களுக்குரிய வேதம், பண், ராகம் என்பவற்றை இசைத்து மஹோற்சவ காலத்தில் அங்கு சாந்நித்தியமாகி நின்று மூலமூர்த்திக்குச் சேவையாற்றித் திருவிழாக் காலப் பந்தோபஸ்துக்கு அநுசரணையாக இருந்து காவல் புரியும்படி வேண்டுதல் சந்தியாவாஹனத்தில் நடைபெறும்.

தமிழ்வேதம் என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் தேவார திருமுறைகளுக்கு எமதுஆலய வழிபாட்டுக் கிரியைகளில் முக்கிய இடம் கொடுக்கப்பெறுவது அவசியம். நவசந்திகளிலும் அந்தந்தத் தேவர்களுக்குரிய பண்முறை அமைந்த திருமுறைகளைப் பாடவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவது அத்துணை சிரமமானதன்று. ஆனால் பெரும்பாலான கோவில்களில் உரிய பண்களுக்கு அமைந்த தேவாரங்களை பாடாமல் நினைவில் வந்த ஏதோவொரு தேவாரத்தைப் பாடுவதைக் காணும்போது மனவருத்தமாக உள்ளது. சில இடங்களில் பண்ணையும் புலப்படுத்தும் ஆற்றலின்றி அப்பண்ணாற் பெயரிட்ட பதிகத்தில் ஒரு பாடலைச் சும்மா படித்தலும் கவலைக்குரியதே.

பத்ததியைக் கவனித்து உரிய தேவாரப் பாடல்களை முன்கூட்டியே தயார்செய்து வைத்திருந்து முறைப்படி பாடுவதற்கான ஏற்பாடுகளைச் சிவாச்சாரியார்களும், த்ர்மகர்தாக்களும் செய்ய வேண்டும். அதேபோல குறிப்பிட்ட ராகதின் பெயரைச் சொல்ல அதனை நாதஸ்வர வித்துவான் வாசிப்பதும் இங்கு இடம்பெறுகின்றது. ஒரு சில நிமிடங்களுக்காவது ராகத்தை வாசிக்க வைத்து அந்த ராக தேவதையின் சாந்நித்தியத்தை அங்கு நிகழச் செய்வது நன்றாகும்.

கட்டியம்:
சுவாமி வீதிவலம் வர ஆரம்பிக்கும்போது சொல்லப்பெறும் வரவேற்பு இது. அரசர் கொலுமண்டபத்துள் பிரவேசிக்கும் போது கட்டியக்காரன் பராக் சொல்லி அறிபிப்பது போன்றதே இதுவும். இதற்கெனக் கட்டியப் பொல்லும் ஒன்று செய்யப்பெற்று அதனை ஒருவர் சுவாமிக்கு முன் தாங்கிவருதல் சில இடங்களில் உண்டு. சுவாமி வீதிவலம் வருவத்ற்காகப் புறப்படுகிறார் என்றும், இன்ன இன் தேவர்கள் சமுகமளிக்கிறார்கள் என்றும் தனிதனியே அறிவிக்கப் பெறும்.
விநாயகர் முதல் சண்டேஸ்வரர் ஈறாக எல்லத் தெய்வங்களையும் கூறி அவர்களின் சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுக் கோபுர வாசலில் வைத்துச் சொல்லுதல் கட்டியத்தில் இடம்பெறும். வீதிவலம் முடிந்து  திரும்பும் போதும் அதே வாக்கியங்கள் சொல்லப் பெற்று இன்னார் வீதியுலா முடிந்து மீண்டும் வருகிறார் என்றும் அறிவிக்கப்பெறும்.

யாக பூஜை:

ஆலயத்தின் ஈசான திக்கிலே மேற்கு வாசலாக யாக மண்டபம் அமைந்திருக்கும். துவஜாரோகணத்தன்று இங்கு யாக பூஜை ஆரம்பமாகும். தீர்த்தத் திருநாளன்று பகல் யாகபூஜை நிறைவு பெறும்.

துவஜாரோகணத்துக்கு முதல்நாளிரவே இங்கு வாயு மூலையில் சந்திரகும்பம் ஸ்தாபித்து அங்குரார்பணம் நிகழ்த்தப் பெற்றிருக்கும். யாக மண்டபத்தின் மத்தியிலே அமைந்த வேதிகயில் (மேடையில்) மூலமூர்த்திக்குரிய ஸ்நபன கும்பங்கள் வைக்கப் பெற்றிருக்கும். வேதிகையின் மேற்குப் புறத்தில் ஓமகுண்டம் இருக்கும். நான்கு திக்குகளிலும் வாசல்கள் விட்டுப் பரிவார கும்பங்கள், யாகேஸ்வரன், யாகேஸ்வரி கும்பங்கள் புண்ணியாஹ கும்பம் முதலியன அமைந்திருக்கும்.
யாகமண்டப அமைப்பானது எல்லா ஆலயங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆயினும் பரிவார கும்பங்களில் ஆவாகனம் செய்து பூஜிக்கப் பெறும். தேவர்கள் மூலமூர்த்திக்கு ஏற்ப மாறுபடும். பிரதிஷ்ட மகாகும்பாபிசேகம், சங்காபிஷேகம் என்பனவற்றுக்கு அமைக்கப் பெறும் யாக மண்டபத்திற்கும் மஹோற்சவ யாக மண்டபத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.

தத்துவ உட்பொருள்:

மஹோற்சவம் முப்பொருள் தத்துவத்தை விளக்குகின்ற வகையை முன்பு பார்த்தோம். ஐந்தொழில் விளக்கமாக இது அமையும் விதத்தை இப்போது பார்ப்போம்.
வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், பேரீதாடனம், ரக்ஷாபந்தனம், துவஜாரோகணம், திருக்கல்யாணம் என்பன படைத்தலைக் குறிக்கும். வாகனோற்சவம், பலிதானம் என்பன காத்தலைக் குறிக்கும். வேட்டைத்திருவிழா, தேர்த்திருவிழா என்பன அழித்தலைக் குறிக்கும். சூர்ணோற்சவம், அங்குர விசர்ஜனம், துவஜ அவரோகணம், மௌனோற்சவம், ரக்ஷபந்தன விசர்ஜனம் என்பன மறைத்தலை குறிக்கும். சண்டேஸ்வர உற்சவம், ஆசார்ய உற்சவம் என்பன அருளலைக் குறிக்கும்.

வேட்டைத் திருவிழா:

இவ்விழாவை மிருக யாத்திரை எனவும் கூறுவர். துஷ்ட மிருகங்களைக் கொன்றொழித்து மக்களைக் காத்தற்காக மன்னர்கள் வேட்டையாடுதலக் கைக்கொண்டிருந்தனர். இதேபோல் எம்மைத் துண்புறுத்தும் மும்மகங்கள், அறுபகைகள் (அசுரத் தன்மை) போன்றவற்றையும்,


கொடிய நோய்கள் என்பவர்றையும் வேட்டையாடி அழிப்பதற்காக இறைவன் வேட்டைத் திருவிழாவை மேற்கொள்வதாக ஐதீகம். ஆயுதங்களுடன் மூர்த்தியை அலங்கரித்து எழுந்தருளச் செய்து பூந்தோட்டத்திலோ அல்லது வேரு ஆலயங்களிற்குச் சென்று (மிருகங்களின் உருவங்களை வைத்து) அங்கு அஸ்திர தேவரைப் பூஜித்து நீற்றுப் பூசனிக்காய் பலியிடுவது வழக்கம்.

தேர்த்திருவிழா:
சுவாலித்து எரியும் அக்கினியின் தோற்றத்தில் அமைக்கப்பெற்ற தேரானது அழித்தலைக் குறிப்பது. தேரின் பாகங்கள் பிரபஞ்சத் தோற்றத்தையும் அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன. அங்கு இறைவன் வீற்றிருந்ததும் தேர் ஓடுலிறது. வாழ்க்கைத் தேர் சிறப்பாக ஓடுவதற்கு நமது இருதய பீடத்திலே இறைவனை எப்போதும் எழுந்தருள வைத்திருக்க வேண்டும். தேர் சரியான பாதையிலே ஓடுவதற்கிசைவாகச் சறுக்குக் கட்டைகள் போட்டு அதனைக் கட்டுப்படுத்துவதுபோல நமதுவாழ்க்கையையும் நக்வழிகளில் நெறிப்படுத்த வேண்டும். மேலே கோபுரம்மோல் குவிந்து செல்லும் தேர்க்கலச முடிவிற் குடைநிழல் தெரிகின்றது. மனம் குவிந்து மேலான சிந்தனையுடன் இறைவனைத் தியானித்தால் அவனது அருட்குடை நிழல் நம்மைத் துயர வெளியிலிருந்து பாதுகாக்கும்.

தேர்க் காலிலே தேங்காயைச் சிதற அடித்து நமது துன்ப துயரங்களைச் சிதற வைப்பதையும், வலிய தேங்காய் ஓடு பிரிந்து வெண்ணிற உட்பாகம் வெளிப்படச் செய்து மல நீக்கத்தை உருவகப் படுத்துவதையும் இந்தத் தேர்த் திருவிழாவில் காணலாம்.

இவ்வாறு அநேக தத்துவங்களை விளக்கும் தேர்த்திருவிழா (பதினைந்துநாள் மஹோற்சவத்தில்) பதின்நான்காம் நாள் பகல் நடைபெறும். வழ்மையான கிரியைகள் நடைபெற்று உள்வீதி வலம் வந்து வெளியே கொண்டுவந்து சுவாமிய தேரிலே வீற்றிருக்கச் செய்வர். முன்னதாக தேர்த்தட்டு புண்ணியாக வாசனம் செய்து சுத்தம் செய்யப் பெற்றிருக்கும்.
தேரினில் ச்வாமி இருக்கையி யாத்ராதானம் முதலியவற்றை வழ்ங்கி விநாயகரைப் பிரார்த்தித்துத் தேங்காய் உடைத்ததும் தேர் புறப்படும்.

தேர் வீதி வலம் வந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தும் வழ்க்கம் எங்கும் உண்டு. உக்கிரமூர்த்தியாக அழித்தல் தொழில் முடிந்து வரும் இறைவனைக் குளிர்விக்கும் பாவனையே இது. சுவாமிக்குப் பச்சை சாத்துவது மட்டுமன்றி சிவாச்சாரியார்களும், உதவியாளர்களுங்கூட அவ்வேளையில் பச்சை வேட்டி சால்வைகளுடன் காணப்பெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சூர்ணோற்சவமும் தீர்த்தத் திருவிழாவும்:

மறைத்தலாகிய தொழிலைக் குறிப்பது சூர்ணோற்சவம். ஆன்மாகளை ஆணவாதி மலங்களில் அழுந்தச் செய்து அநுபவ வாயிலாக இறையுணர்வு பெறச் செய்வத்தே ஆண்டவனின் அருள் நோக்கம்.

 
நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்லஎன்ற ஆன்றோர் வாக்கு நோக்கற்பாலது. துன்பத்தின் பின்னர்தான் இன்பத்தை நன்கு அனுபவிக்கலாம். உடலைப் பற்றியுள்ள அழுக்குகளோடு மன அழுக்குகளான காமம், குரோதம் முதலியனவற்றையும் நீக்குவதற்கு அடையாளமாகத் திருப்பொற்சுண்ணம் இடித்து இறைவனுக்குச் சாத்தப்பெறுகின்றது. இறைவனை முழுக்காட்டி நாமும் தீர்த்தமாடுகின்றோம்.

சூர்ணம் என்பது தூள். பொன்நிறமான பொடி என்பது பொன்வண்ணச் சுண்ணம் எனக் கூறப்பட்டுப் பின்னர் போற்சுண்ணம் என மருவியது. மஞ்சட்பொடி முதலியவற்றைத் தயார் செய்து வைத்திருந்து சவர்க்காரம் பூசிக் குளிப்பதுபோல முற்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள். அதனையே இங்கு திருப்பொற்சுண்ணத்திற்குப் பயன் படுத்துகின்றோம். தீர்த்தத் திருவிழா அருளலைக் குறிக்கும்.

யாக தரிசனம், மஹாபிஷேகம்:

திருப்பொற்சுண்ணமிடித்து தீர்த்தமாடியபின் சுவாமியை யாக வாசலில் கொண்டுவந்து யாகதரிசனம் செய்வித்துப் பூர்ணாகுதி வழங்குவர். ரக்ஷை தயாரித்து மூர்த்திகளுக்குச் சாத்துவர். உற்சவமூர்த்தியை உரிய இடத்தில் எழுந்தருளச் செய்தபின் யாக கும்பங்களை உத்தாபனம் செய்து பிரதான கும்பங்களை எடுத்துவந்து மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்வர். அங்குரவிசர்ஜனம் செய்து முளைப்பாலிகைகளைச் சகல மூர்த்திகளுக்கும் சாத்தி நீராஜனம் நீராஜனம் செய்வதை அடுத்து வழ்மையான வைரவர் பூஜை, சண்டேஸ்வரர் பூஜைகளுடன் தீர்த்தோற்சவம் நிறைவு பெறும். பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதங்களுடன் ரக்ஷையும், முளைப்பாலிகைகளும் வழங்கப் பெறும். அடியார்கள் அவற்றையும் பக்தியோடு தரிசிப்பார்கள்.

கொடியிறக்கம்:
சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல் நடத்தும் வழக்கமும் உண்டு.

கணபதி தாளம் முதலியவற்றை துவஜாரோகணத்தின் (கொடியேற்றத்தின்) போது செய்ததுபோற் செய்து சமஸ்த தேவதா விசர்ஜனம் செய்வர். (கொடியேற்ற நாளில் சம்ஸ்தேவதா ஆவகனம் செய்து சகல தேவர்களையும் அழைப்பது போல கொடியிறக்கும் போது அவர்களை சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளச் செய்வதே சமஸ்த தேவதா விசர்ஜனமகும்)
நிதானமாக கொடிக்கயிற்றை அவிழ்த்துக் கொடியைச் சகல வாத்தியக் கோஷங்களுடன் இறக்கிக் கொடித்தம்பக் கூர்ச்சத்தை மூலமூர்த்தியிடமும் கொடிப்படத்தை நந்தியிடமும் சமர்ப்பித்து நீராஜனம் செய்வர்.

இதன் பின் உற்சவ மூர்த்தியை வீதிவலம் வரச் செய்வர். கொடியிறக்க நாளில் முதலில் வெளிவீதி வலம் வந்த பின்னரே உள்வீதி வலம் வருதல் முறை. வெளிவீதி வலம்வரும்போது நவசந்திகளிலும் முதலாம் நாள் ஆவாகனம் செய்த தேவர்களை மகிழ்வித்த பின் உத்வாகனம் செய்வர்.

இதன்பின் உள்வீதியில் வலம் வரும் போது:

கிழக்கு கோபுர வாசலில் இருந்து தென்கிழக்கு வரை மங்கள வாத்தியமும்;

அங்கிருந்து தெற்கு வாசல்வரை வேதபாராயணமும்;

அங்கிருந்து தென்மேற்கு வரை தமிழ் வேதபாராயணமும்;

அங்கிருந்து மேற்குத் திசைவரை சங்கு நாதமும்;

அங்கிருந்து வடமேற்கு வரை தவில் தாள வாத்தியமும்;

அங்கிருந்து வடக்கு வரை நாதஸ்வர கீத இசையும் இசைத்து;

அங்கிருந்து வடகிழக்கு வரை மௌனமாகவும்;

அங்கிருந்து வாயில்வரை சகல வாத்திய கோஷங்களுடனும் வந்து இருப்பிடம் சேர்ப்பர்.

சண்டேஸ்வர உற்சவம்:

இதன்பின் பைரவர், சண்டேஸ்வரர் பூஜைகள் முடித்து சண்டேஸ்வரமூர்த்தியை வீதிவலம்வரச் செய்வர். சண்டேஸ்வரமூர்த்தி சிறிய விக்கிரகமாக அமைந்திருப்பதால் சிறுவர்கள் அதனைத் தூக்கிக்கொண்டு விளையாட்டாக ஓடிவருவதைப் பல இடங்களில் காணமுடிகிறது. இது தவறான ஒன்றாகும். தலைசிறந்த பக்தராகவும், பக்தகோடிகளின் வழிபாட்டுப் பலனை அனுகிரகம் செய்பவராகவும் உள்ள சண்டேஸ்வரரைப் பணிவுடனும், பக்தியுடனும் கௌரவமாக வீதிவலம் வரச் செய்தல் அவசியமாகும்.

சண்டேஸ்வர உற்சவத்தின் பின் சிவாச்சாரியார் சகல மூர்த்திகளின் ரக்ஷா பந்தனங்களையும் (காப்பு) அகற்றித் தமது கரத்திலுள்ள ரக்ஷா பந்தனத்தையும் நீக்குவார்.

ஆசார்ய உற்சவம்:

மஹோற்சவத்தின் இறுதிக் கட்டமாக அமைவது ஆச்சாரிய உற்சவம். இறைவன்; குரு, லிங்கம், சங்கமம் என்ற மூன்று இடங்களில் நின்று அருள் செய்வதாகச் சாஸ்திரங்கள் பகரும்.

குரு கிரியைகளை நடத்தும் சிவாச்சாரியார், லிங்கம் என்பது பிம்பமாகிய திருவுருவமாகும். சங்கம் என்பது திருவடியார் கூட்டம். சங்கம வழிபாட்டை எடுத்துக் காட்டுவது மஹேசுர பூஜை (அன்னதானம்) ஆகும். மஹோற்சவம் நிறைவு பெற்று மறுநாளில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது மரபு.

மஹோற்சவ காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றி வைத்துத் திருவருட் பேறினைத் தந்தருளும் குரு மூர்த்தியாகிய சிவாச்சாரியாரைப் பூமாலை முதலியவற்றல் அலங்கரித்து மங்கள வாத்திய சகிதம் வீதிவலமாக அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்து அடியார்கள் யாவரும் அவரை வணங்கி இயன்ற அளவு குருதட்சணை வழங்கி, விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு குருவின் அருளுரையை செவிமடுத்த பின் அவரை விடுதிவரை அழைத்துச் சென்று பின்னர் தமதில்லம் திரும்புவர்.

எனவே, ஆலயத்திற்குச் சென்றோம், பணத்தைக் கொடுத்தோம், பெயர்-நட்சத்திரத்தைச் சொன்னோம் யாவற்றையும் அர்ச்சகரிடம் பொறுப்புக் கொடுத்துவிட்டு நடப்பதைச் சிவனே என்று பார்த்திருந்தோம் என்றில்லாமல் அங்கு நடக்கும் கிரியைகளுடன் ஒன்றி லயித்துப் பயன்பெற முயலவேண்டும்



நன்றி: வித்யாபூஷ்ணம், பிரம்மஸ்ரீ ப. சிவானந்தசர்மா
 



கருத்துகள் இல்லை: