செவ்வாய், 21 ஜூன், 2011

எய்ட்ஸ்

நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம்,
அனைத்து நாடுகளும் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் ‘சிகப்பு நாடா சின்னம்” அல்லது ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்” ஆண்டுதோறும் டிசம்பர் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இந்நாளில் எய்ட்ஸ் நோய் பற்றியும், அதன் கொடிய விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பிரதான நோக்காகக் கொண்டு திட்டமிடப்படுகின்றது.

1981ம் ஆண்டில் உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி அமெரிக்காவில் (U.S.A.)கண்டுபிடிக்கப்பட்டார். முதலாம் நோயாளி இனங்காணப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குள் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி வரை உலக சுகாதார ஸ்தாபன (W.H.O.) அறிக்கையின்படி, 119, 818 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
இந்நிலையில் எய்ட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. இம்மாநாட்டிலேயே எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாதம் முதலாம் திகதி இத்தினத்தை அனுஸ்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது. இதையடுத்து அரசுகளும் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுவது வழக்கம். 1988-2004 வரை எய்ட்ஸ் தினம், ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் நிறுவனத்தால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 1988ஆம் ஆண்டு இதன் கருப்பொருள் ‘தொடர்பாடல்” என்பதாகும். தொடர்ந்து 1989 - ‘எய்ட்சும் இளைஞர்களும்’, 1990 - ‘எய்ட்சும் பெண்களும்’, 1991 - ‘சவாலை பகிர்ந்து கொள்ளல்’, 1992 - ‘சமூகத்தின் ஈடுபாடு’, 1993 - ‘செயலாற்றுதல்’, 1994 - ‘எய்ட்சும் குடும்பமும்’, 1995 - ‘உரிமைகளையும், பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்’, 1996 - ‘ஒரு உலகம் ஒரு நம்பிக்கை’, 1997 - ‘எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்’, 1998 - ‘மாற்றத்துக்கான சக்தி’, 1999 -’செவிகொடு, கற்றுக்கொள், வாழ்’. 2000 - ‘எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்’, 2001 - ‘நான் பாதுகாப்புடன் - நீ?’, 2002, 2003 - ‘தழும்புகளும். சாதக பாதகத்தை வித்தியாசம்காண்’, 2004 - ‘பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்’ ஆகிய தலைப்புகளில் அனுஸ்டிக்கப்பட்டது. 2005 முதல் இப்பொறுப்பு “உலக எய்ட்ஸ் பிரசாரம்” (The World AIDS Campaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2005 முதல் 2010ஆம் ஆண்டுவரை இதன் கருப்பொருள் ‘எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று’ (Stop AIDS. Keep the Promise.” என்பதாகும்.

ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி” எனப் பொருள் தரும் எய்ட்ஸ் (AIDS- Acquired - (பெற்ற) Immuno - (நிர்பீடக், ) Deficiency - (குறைபாட்டுச்) Syndrome- (சிக்கல்) ) என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பைக் குறிக்கும் நோயாகும். பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் நிலைதான் எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
எய்ட்ஸ் வைரஸினால் பரவும் நோய்.
எச்.ஐ.வி எனும் வைரஸினால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. வைரஸ் என்பதை நோயை உண்டாக்கக்கூடிய மிக சிறிய நுண்ணுயிர் என்று சொல்லலாம். பக்டீரியா (Bacteria), பங்கஸ் (Fungus) போன்ற நுண்ணுயிர்களைச் சாதாரண நுணுக்குக்காட்டி (Microscope) மூலம் பார்க்கலாம். சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்ந்த இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும். தற்போது இலங்கையில் மிக வேகமாகப்பரவி வரும் பன்றிக் காய்ச்சலும், A H1N1 வைரஸ் தொற்றின் காரணமாகவே பரவுகின்றது.
வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து, பெருகுவதற்கு உயிருள்ள கலம் (Cell) தேவை. அது பெருகும் போது, தான் தங்கியிருக்கும் கலத்தை அழிக்கக்கூடும்; அல்லது செயற்திறனைப் பாதிக்கக்கூடும்.

எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குகின்றது. நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீ-ஹெல்பர் கலங்களையே (T-helper Cell) இது முக்கியமாகத் தாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். HIV வைரஸ் தொற்றியிருக்கும் கலத்தில் பெருகிப் பின் அக்கலத்தை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளியின் நிர்பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எயிட்ஸின் வரலாறு
ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும். முதலில் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இவ்வாறாக எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில் (Institute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானி லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது L.A.V வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று பெயரிடப்பட்டது. 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ”தேசிய புற்று நோய் நிறுவனம்” இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது இதற்கு H.I.V - type III வைரஸ் ( Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது. 1986 ம் ஆண்டில் தான் தற்போது பயன்படுத்தப்படும் HIV வைரஸ் (Human (மானுட) I mmuno deficiency (நீர்ப் பீடனக் குறைபாடு.) Virus (வைரசு)) என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை: