செவ்வாய், 21 ஜூன், 2011

கெவின் கார்ட்டர் (Kevin Carter) எடுத்த புகைப்படம்!

எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால் ஓர் உயிரின் கடைசிக் கட்டப் போராட்டத்தைப் பல கோணங்களில் வீடியோ படம் எடுத்து அதை நாடு முழுமைக்கும் ஒளிபரப்பி தனியார் தொலைக்காட்சிகள் விளம்பரம் தேடிக்கொண்டது தான். அந்தக் காட்சி ஏற்படுத்திய பாதிப்பு எனக்கு ஒரு
வாரத்திற்கு மேல் நீடித்தது. கண்களை மூடினால் அந்தக் காட்சி நினைவுக்கு வந்து பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. எனக்கே இப்படியென்றால் அவரது பெற்றோரையும் உற்றார் உறவினரையும் இந்தக் காட்சி எவ்வளவு பாதித்திருக்கும்?

பாதிப்பு பற்றி எழுதும் போது என்னை மிகவும் பாதித்த ஒரு புகைப்படம் நினைவுக்கு வருகிறது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டர் (Kevin Carter) எடுத்த புகைப்படம்.

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான இது 1994 ஆம் ஆண்டு மிகவும் உயரிய பரிசான புலிட்சர் பரிசை அவருக்குப் பெற்றுத் தந்தது. சூடானில் பயங்கரப் பஞ்சம் நிலவிய நேரத்தில் அங்கு பயணம் மேற்கொண்டிருந்த போது தான் இக்குழந்தையின் கடைசித்துடிப்பையும் சில நிமிடங்களில் தனக்கு இரை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் பக்கத்திலேயே அமர்ந்து காத்துக் கொண்டிருந்த கழுகையும் அவரது காமிரா பதிவு செய்தது.

பஞ்சத்தின் கொடுமையை உலகுக்கு எடுத்துக் காட்டும் நோக்கோடு தான் இதை அவர் பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால் பத்திரிக்கையில் இது வெளியானவுடன் உலகின் பல மூலைகளிலிருந்தும் பத்திரிக்கை ஆபிசுக்கு ஏகப்பட்ட போன் கால்கள். இப்போது அந்தக் குழந்தையின் நிலை என்ன? உயிர் பிழைத்ததா என்ற விசாரிப்புகள். குழந்தையைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் அதைப் புகைப்படம் எடுத்த கார்டர் கெவினுக்கு உலக முழுவதிலிருந்து பலத்த கண்டனம் எழுந்தது.


இந்தக் கடுமையான கண்டனங்கள் ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் தாம் நேரில் கண்ட பசி, பட்டினிச் சாவுகள் முதலியவற்றால் மன அழுத்தம் ஏற்பட்டு பரிசு வாங்கிய இரண்டு மாதங்களுக்குள் முப்பத்து மூன்றே வயதில் கெவின் கார்டர் தம் காரில் கார்பன் மோனாக்சைடு வாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்டார்.

புகைப்படத்தைப் போலவே அந்தக் கலைஞரின் தற்கொலையும் என் மனதை மிகவும் பாதித்தது!

கருத்துகள் இல்லை: